நடுநிலையாக்கல் வினை

 நடுநிலையாக்கல் :

   வேறுபட்ட வேதிப் பண்புகளைக் கொண்டுள்ள இரண்டு வேதிப் பொருள்கள் ஒரு வேதி வினையின் மூலம் நடுநிலை அடையும் நிகழ்வு நடுநிலையாக்கல் எனப்படும். 

நடுநிலையாக்கல் வினை :

நடுநிலையாக்கல் வினை என்பது அமிலமும், காரமும் வினைபுரிந்து உப்பையும் நீரையும் உருவாக்கும் வினை ஆகும். 

அமிலம் + காரம்   ---------->  உப்பு + நீர்

எ. கா : 

     HCl  + NaOH   ---------> NaCl  + H2O


 நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நடுநிலையாக்கல் வினை :

     அமிலங்களையும், காரணங்களையும் சமநிலைப்படுத்துவது நமது ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் அவசியமாகும். 

1. தேனீ கொட்டுதல் :

   நம்மை சிவப்பு எறும்பு கடிக்கும் பொழுது அல்லது தேனீ கொட்டும் பொழுது ஃபார்மிக் அமிலமானது தோலினுள் உட் செலுத்தப்படுகிறது. இந்த அமிலமானது எரிச்சல் உணர்வினையும், வலியையும் உண்டாக்குகிறது. 

     வலி மற்றும் எரிச்சல் உணர்வுள்ள இடத்தில் கால்சியம் ஹைட்ராக்சைடை ( நீற்றுச் சுண்ணாம்பு) தேய்த்து ஃபார்மிக் அமிலம் நடுநிலையாக்கப்படுகிறது. 

2. குளவி கொட்டுதல் :

     குளவி கொட்டும் பொழுது எரிச்சல் போன்ற உணர்வினையும், வலியையும் நாம் உணர்கிறோம். இது குளவியால் நமது உடலில் செலுத்தப்படும் "அல்கலி" என்ற காரப்பொருளின் மூலம் ஏற்படுகிறது. இந்த காரத்தன்மையை நடுநிலையாக்க அமிலத்தன்மை கொண்ட வினிகரில் பயன்படுத்துகிறோம். 

3. பற்சிதைவு :

    பொதுவாக ஒரு நாளைக்கு இரண்டு முறை நாம் பல் துலக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில், நம் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் பற்களுக்கு இடைப்பட்ட இடைவெளியில் சிக்கியுள்ள உணவுத் துகள்களைச் சிதைத்து அதன் மூலம் அமிலத்தை உருவாக்குகின்றன. இதனைத் தடுக்க நாம் அமிலத்தை நடுநிலையாக்க வேண்டும். 

   வலிமை குறைந்த காரங்களைக் கொண்ட பற்பொடி அல்லது பற்பசையைக் கொண்டு பல் துலக்கும் போது அமிலமானது நடுநிலையாக்கப்படுகிறது. இதனால், பற்கள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். 

 4. வேளாண்மை :

   அதிக அமிலத்தன்மையுடைய மண் தாவர வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. எனவே, இதனைச் சரிசெய்ய விவசாயிகள் சுண்ணாம்பு ( CaO), சுண்ணாம்புக் கற்கள் ( கால்சியம் கார்பனேட்) அல்லது மரக்கட்டைகளை எரிப்பதால் கிடைக்கும் சாம்பல் ஆகியவற்றை மண்ணில் சேர்க்கின்றனர். இது மண்ணின் அமிலத் தன்மையை நடுநிலையாக்கம்படுகிறது. 

5. தொழில்துறை :

    அ). தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவுகளில் சல்ஃபியூரிக் அமிலம் உள்ளது. ஆறுகள் மற்றும் நீரோடை களின் வழியாக கழிவுகளை வெளியேற்றும் முன் அவற்றுடன் சுண்ணாம்பு சேர்க்கப்படுகிறது. 

ஆ). மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் தயாரிப்பதற்கு  நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருள்கள் எரிக்கப்படுகின்றன. அவை எரியும்போது சல்பர் - டை - ஆக்சைடு உருவாகிறது. எனவே, இந்த அமிலத்தன்மை மிக்க வாயு மின் நிலையங்களில் சுண்ணாம்புத்தூள் அல்லது சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு நடுநிலையாக்கப்படுகிறது.இவ்வாறு சல்பர் - டை - ஆக்சைடால் ஏற்படும் காற்று மாசுபாடு தடுக்கப்படுகிறது. 

6. உடல் அமிலத்தன்மை :

    நமது உடலில் கல்லீரல், பித்தப்பை மற்றும் கணையம் ஆகியவற்றால் சுரக்கப்படும் நொதிகளும், வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் சேர்ந்து உணவுப் பொருட்களின் செரிமானத்திற்கு உதவுகின்றன. 

   சில நேரங்களில் நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் அதிகப்படியாக சுரப்பதால் உணவுக்குழாய் மற்றும் மார்புப் பகுதிகளில் எரிச்சல் உணர்வினை நாம் உணர்கிறோம். இது மீண்டும் மீண்டும் ஏற்பட்டால் வயிறு மற்றும் உணவுக்குழாய்களில் புண் உருவாகி, பாதிப்பு மேலும் அதிகரிக்கிறது. 

  இதனை நடுநிலையாக்க வலிமை குறைந்த காரங்களான மெக்னீசியம் ஹைட்ராக்சைடு மற்றும் அலுமினியம் ஹைட்ராக்சைடு போன்றவற்றின் கலவை அமில நீக்கி யாகப் பயன்படுத்தப்படுகிறது.



     


கருத்துகள்

popular content